அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ராக்மார்ட் பகுதியில், காணாமல் போன ஒருவரைத் தேடும் பணியின்போது குடும்பத்தாரின் அனுமதியின்றி பண்ணைக்குள் அத்துமீறி நுழைந்த போலீஸ் அதிகாரி ஒருவர், அங்கு செல்லமாக வளர்க்கப்பட்டு வந்த ‘ஹீ-ஹாவ்’ என்ற சிறிய கழுதையைச் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் போலீஸ் அதிகாரி உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுமார் 12:45 மணியளவில், எல்ஸ்பெரி பண்ணையில் அமைந்துள்ள குடும்பத்தினரின் மேய்ச்சல் நிலத்திற்குள் போலீஸ் அதிகாரிகள் நுழைந்துள்ளனர். பண்ணையின் உரிமையாளரான ஹன்னா இஸ்ரேல் கூறுகையில், அதிகாரிகள் குடும்பத்தினருக்கு எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமலோ அல்லது அனுமதி பெறாமலோ நுழைந்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
நள்ளிரவில் பண்ணையில் விநோதமான மனிதர்கள் நடமாடுவதை உணர்ந்த சிறிய ஆண் கழுதையான ‘ஹீ-ஹாவ்’ கத்திக்கொண்டே வெளியே வந்துள்ளது. அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், அந்த விலங்கைக் கண்டு தான் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். காணாமல் போன நபரைத் தேடும் ஒரு மீட்பு நடவடிக்கையாகத் தொடங்கிய இந்தச் சம்பவம், குடும்பத்திற்குப் பெரும் பேரிடியாகவும் இதயத்தை நொறுக்கும் இழப்பாகவும் மாறிவிட்டது. ‘ஹீ-ஹாவ்’ என்பது ஏதோ ரோட்டில் திரியும் விலங்கு அல்ல, மாறாக அந்தக் குடும்பத்தாரால் மிகவும் பாசமாக வளர்க்கப்பட்ட செல்லப்பிராணி ஆகும். தன் செல்லப் பிராணிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு நீதி கேட்டு ஹன்னா இஸ்ரேல் போராடி வருகிறார்.
இதற்கிடையில், இந்தச் சம்பவத்திற்கு எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்காக ஹன்னா இஸ்ரேல் தொடங்கிய ஆன்லைன் நிதி திரட்டும் திட்டம் குறுகிய காலத்திற்குள் 35,000 டாலருக்கும் அதிகமான தொகையைக் கடந்துள்ளதாக ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
போலீசார் தரப்பில், கழுதை சுடப்பட்ட பண்ணைக்கு அருகிலுள்ள தேவாலயத்தில்தான் தேடப்பட்டு வந்த சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, செல்லப் பிராணியான சிறிய கழுதை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து ஜார்ஜியா மாநிலத்தின் வேளாண்மைத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
