சீனாவில் உள்ள காங்சு மாகாணத்தில், இரண்டு கட்டிடங்களுக்கு இடையே இருந்த ஆபத்தான மற்றும் மிகவும் குறுகிய ஆழமான இடுக்கில் சிக்கிய நாய்க்குட்டியைக் காப்பாற்றுவதற்காக, 3 வயது சிறுமி ஒருவரை கயிற்றைக் கட்டி கீழே இறக்கிய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரின் நெஞ்சங்களையும் உருக வைத்துள்ளது. இந்தத் துணிச்சலான செயலால் அந்தச் சிறுமி தற்போது பலரின் பாராட்டுக்களைப் பெற்று ‘குட்டி ஹீரோயின்’ என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
சீனாவின் லின்சியா பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று இந்த நெகிழ்ச்சியான மீட்புப் பணி நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள நாய்க்குட்டி ஒன்று சுமார் 3 மீட்டர் ஆழமுள்ள இரண்டு கட்டிடங்களுக்கு இடைப்பட்ட குறுகிய இடைவெளியில் தற்செயலாகத் தவறி விழுந்துள்ளது. பெரியவர்களாலோ அல்லது வழக்கமான மீட்புக் கருவிகளாலோ அந்தச் சிறிய இடுக்குக்குள் சென்று நாய்க்குட்டியை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் ஒரு வித்தியாசமான யோசனையைச் செயல்படுத்த முடிவு செய்தனர்.
🐶❤️ She was only 3… but she became the puppy’s hero.
In Linxia, China, a father carefully lowered his 3-year-old daughter into a narrow gap using a makeshift harness to rescue a trapped puppy. 🥺
The little girl reached the frightened pup and helped bring it back to safety —… pic.twitter.com/gc1MuHHVWZ
— @Trecopo (@Trecopo1) September 1, 2026
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ‘நன்னன்’ என்று அடையாளம் காணப்பட்ட மூன்று வயது பெண் குழந்தையை, பெரியவர்கள் கைகளால் ஒரு தற்காலிக சேணம் (Makeshift harness) மூலம் பாதுகாப்பாகக் கட்டி கயிற்றின் மூலம் அந்தக் குளிர்ந்த மற்றும் இருண்ட குறுகிய இடைவெளிக்குள் கவனமாகக் கீழே இறக்குவதைக் காண முடிகிறது. எந்தவித பயமும் இன்றி மிகவும் அமைதியாகக் கீழே இறங்கிய அந்தச் சிறுமி, அங்கே பயந்துபோய் நடுங்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டியைப் பத்திரமாகத் தன் கைகளில் எடுத்துக் கொண்டார்.
உடனே மேலே நின்றிருந்த பெரியவர்கள் கவனமாகச் சிறுமியையும், அவர் கையில் இருந்த நாய்க்குட்டியையும் பத்திரமாக மேலே மீட்டனர். இந்த வியக்கத்தக்க மீட்பு நடவடிக்கையின் முடிவில் சிறுமியும், நாய்க்குட்டியும் எந்தவித பெரிய காயமும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இதற்கிடையில், இந்தச் சம்பவத்திற்கு முன்பே அந்த நாய்க்குட்டியுடன் நன்னனின் குடும்பத்தாருக்கு ஒரு சிறிய பிணைப்பு ஏற்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் மீட்புக்குப் பிறகு, அந்தத் தெரு நாய்க்குட்டியைத் தங்களது வீட்டிலேயே தத்தெடுத்து நிரந்தரமாக வளர்க்கத் தொடங்கியுள்ளனர். விலங்குகள் மீது சிறு வயதிலேயே குழந்தை காட்டிய இந்த மாபெரும் கருணையும், அவரது அசாத்தியத் துணிச்சலும் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
