இயற்கையின் கோரத்தாண்டவத்தால் நேபாள நாடு தற்போது வரலாெற்றில் இல்லாத அளவுக்குக் கடுமையான பேரழிவைச் சந்தித்துள்ளது. பருவநிலை மாற்றத்தின் கோர முகத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு, அந்த நாட்டை முற்றிலுமாக உலுக்கிப் போட்டிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 26 அன்று, லாங்டாங் லிருங்கின் வடக்குப் பகுதியில் சுமார் 17,000 அடி உயரத்தில் இருந்த பிரம்மாண்டமான பனிமலை ஒன்று திடீரெனச் சரிந்து விழுந்தது. நேபாள-திபெத் எல்லையில் உள்ள போதே கோஷி ஆற்றில் விழுந்த இந்தப் பனிச்சரிவு, அதன் வழியாக மத்திய நேபாளத்தின் மலைப்பகுதிகளில் பாயும் திரிசூலி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.

இந்த எதிர்பாராத பேரிடரால் ஆற்றுப்பாதையில் இருந்த சாலைகள், வீடுகள், பாலங்கள் மற்றும் பள்ளிகள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு தரைமட்டமாகின. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,000-த்தைக் கடந்துள்ளது. சேற்றில் தோண்டத் தோண்ட மனித உடல்கள் மீட்கப்பட்டு வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 583 வெளிநாட்டினர் உட்பட சுமார் 4,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஒருபுறம் மீட்புப் பணிகள் தொடர்ந்தாலும், மறுபுறம் வீடுகளையும் உடைமைகளையும் இழந்த மக்களின் வாழ்க்கையை மறுசீரமைக்கும் மிகப் பெரிய சவால் அரசின் முன் உள்ளது. இந்தத் திடீர் வெள்ளத்திற்குப் பிந்தைய புனரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான செலவு சுமார் 5 பில்லியன் டாலர் என காத்மாண்டு அரசு மதிப்பிட்டுள்ளது. இது அந்நாட்டின் மொத்தப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்காகும்.

இந்தச் சூழலில், வெளிநாடுகளிடம் மனிதாபிமான உதவிகளைக் கோருவதைத் தவிர்த்துவிட்டு, சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து “காலநிலை இழப்பீடு”  கோரும் நிலைக்கு நேபாளம் தள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாகப் பேசிய நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் சிசிர் கானல், “சேதம் மிக அதிகம். பல்லாயிரக்கணக்கான வீடுகள், பள்ளிகள் மற்றும் பல பில்லியன் ரூபாய் மதிப்பிலான நீர்மின் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இது மனிதாபிமானம் சார்ந்த விஷயம் அல்ல; இது சட்ட மற்றும் தார்மீகப் பொறுப்பு சம்பந்தப்பட்ட விஷயம். உலகில் அதிகளவு கார்பன் மற்றும் மாசு உமிழும் நாடுகளான சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்றவற்றுக்கு, நேபாளம் போன்ற பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு உள்ளது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் இந்தக் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் உலகளாவிய கார்பன் உமிழ்வுப் புள்ளிவிவரங்கள் அமைந்துள்ளன. உலகளாவிய கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் சீனா சுமார் 29 முதல் 33 சதவீதத்துடன் முதலிடத்திலும், அமெரிக்கா 12.7 முதல் 15 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்து, ஆண்டுதோறும் சுமார் 4.4 பில்லியன் மெட்ரிக் டன் CO₂-க்கு இணையான வாயுவை (சுமார் 7.3 முதல் 8.3 சதவீதம்) வெளியிட்டு வருகிறது. இத்தகைய பெரும் தொழிற்சாலை நாடுகளின் பசுமை இல்ல வாயு வெளியேற்றமே இமயமலைப் பகுதியைச் சீரழித்து, இது போன்ற பேரிடர்களுக்குக் காரணம் என்று நேபாளம் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.