ஆசிய நாடான நேபாளத்தில் அண்மையில் அரங்கேறிய கோர வெள்ளப் பேரழிவில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரமான சூழலில் துரிதமாகச் செயல்பட்டு நிவாரணப் பணிகளில் கைகொடுத்த இந்தியா மற்றும் சீனா ஆகிய அண்டை நாடுகளுக்கு நேபாளப் பிரதமர் பாலன் ஷா நாடாளுமன்றத்தில் வைத்து வெளிப்படையாகத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். பேரிடர் ஏற்பட்ட முதல் நாளே இரு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்பக் குழுவினர் நேரில் வந்து வான்வழிப் பகுப்பாய்வு உள்ளிட்ட கள ஆய்வுகளை மேற்கொண்டு சேதமதிப்புகளைக் கணக்கிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட இடங்களில் பல அடி உயரத்திற்குச் சேறும் சகதியும் குவிந்திருந்ததால், அதிநவீன இயந்திரங்களோ அல்லது ராணுவ மற்றும் ஆயுதப் படை வீரர்களோ நிற்பதற்குகூட இடமின்றி மிகக் கடினமான சூழல் நிலவியதாகப் பிரதமர் பாலன் ஷா நாடாளுமன்றத்தில் விவரித்துள்ளார்.
இந்தச் சவாலான காலகட்டத்தில் இந்திய அரசு தனது ஐந்தாம் கட்ட நிவாரணப் பொருட்களை அவசரகால விமானப் போக்குவரத்து மூலமாகத் தொடர்ந்து வழங்கி வருவதுடன், சிறப்புத் தேடுதல் மற்றும் மீட்பு உதவிகளையும் அளித்து நேபாளத்திற்கு உறுதுணையாக நின்றுள்ளது.
மறுபுறம், வழக்கமான மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொள்வதைக் கடந்து, மிகப்பெரிய அளவில் கார்பன் மற்றும் மாசுவை வெளியேற்றும் வல்லரசு நாடுகளிடம் இருந்து “காலநிலை நஷ்டஈடு” பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசித் கானல் தீவிரமாக எழுப்பியுள்ளார்.
இது வெறும் தொண்டு சார்ந்த உதவி அல்ல என்றும், சட்ட மற்றும் தார்மீகப் பொறுப்பு சார்ந்தது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். சர்வதேச தளங்களில் இந்த விவகாரத்தை மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் எழுப்பவுள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ள இந்த அதிரடி நிலைப்பாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
