இயற்கைப் பேரழிவுகளின் போது நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள், மனிதர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் பெரும் திருப்புமுனையாக அமைந்துவிடுகின்றன.

அந்த வகையில், நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கின் போது, வீடுகள் பல அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும், உடையாமல் கம்பீரமாக நின்று இணையத்தில் வைரலான ‘பச்சை வீட்டின்’ உரிமையாளர் லக்ஷ்மி பாண்டே பகிர்ந்துள்ள அனுபவம் அனைவரையும் ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பேரபாயத்தின் நடுவே ஒரு குடும்பம் எப்படித் தப்பியது என்பதை விவரிக்கும் இவரின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது. வெள்ளம் பெருக்கெடுத்து வந்த அந்தப் பதற்றமான தருணத்தில், லக்ஷ்மி பாண்டேவும் அவரது கணவரும் வீட்டின் அருகே உள்ள தங்களது கடையில் இருந்துள்ளனர். வெள்ளத்தின் வீரியம் அதிகரிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டிலிருந்த மாமியார் மற்றும் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காகப் பதறியடித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடிவந்துள்ளனர்.

வீட்டிற்கு வெளியே இருந்து “கீழே வாருங்கள்” என்று லக்ஷ்மி பாண்டே எவ்வளவோ கத்தியும், அவரது மாமியாருக்குக் காது சரியாகக் கேட்காததால் அந்தச் சத்தம் அவருக்குக் கேட்கவே இல்லை. இதனால் வேறு வழியின்றி மாமியாரையும் குழந்தைகளையும் அழைக்க லக்ஷ்மி பாண்டேவும் அவரது கணவரும் வீட்டின் மேல் தளத்திற்குச் சென்றுள்ளனர்.

மேலே சென்ற பிறகு, “வெள்ளம் நம்மை அடித்துச் செல்லப் போகிறது” என்று லக்ஷ்மி பாண்டே பயந்துபோய் கூறியபோது, அவரது மாமியார் மிகவும் நிதானமாக “அப்படியெல்லாம் எதுவும் நடக்காது” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். மாமியாருக்குக் காது கேட்காததால் அனைவரும் மேல் தளத்திற்குச் சென்றதும், அங்கேயே இருந்ததும் தான் அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் உயிர் பிழைக்கக் காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் மாமியாரின் அந்த அசைக்க முடியாத நம்பிக்கையும், காது கேட்காததால் ஏற்பட்ட அந்தச் சிறிய தாமதமுமே தங்களைக் காப்பாற்றியதாகக் கூறும் லக்ஷ்மி பாண்டே, தங்களின் இந்தக் மாபெரும் உயிர் பிழைப்பு முழுவதும் இறைவனின் செயல்தான் என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.