இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து மோசமான தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் மைதானத்தை விட்டு வெளியேறும்போது புன்னகையுடன் சென்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பையும், ரசிகர்களின் கடும் கண்டனங்களையும் பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலும், லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 194 ரன்கள் வித்தியாசத்திலும் கோட்டை விட்டது. இதனால் இங்கிலாந்து தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியதுடன், பாகிஸ்தான் அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
رضوان کو دیکھو
ہے کوئی اس کے چہرے پر ندامت ؟ https://t.co/QoAtutXbVR pic.twitter.com/rJ4AfNfkcE— uzzi (@uzzi0011) August 31, 2026
இந்தச் சூழலில், லார்ட்ஸ் போட்டிக்குப் பிறகு ரசிகர்கள் புடைசூழ வீரர்கள் பேருந்தை நோக்கி நடந்து சென்றனர். அப்போது அங்கிருந்த ரசிகர்களைப் பார்த்து முகமது ரிஸ்வான் மிகவும் ரிலாக்ஸாகக் கையசைத்தபடியும், முகத்தில் சிரிப்புடனும் நடந்து சென்றார். இந்தத் தருணத்தை பதிவு செய்த ரசிகர்கள் சிலர், அணியின் மோசமான தோல்விக்குப் பிறகு ஒரு மூத்த வீரரின் இந்த அலட்சியமான சிரிப்பு எந்த வகையிலும் நியாயமில்லை என்று சமூக வலைதளங்களில் சாடினர். “முகமது ரிஸ்வானின் முகத்தில் துளியாவது குற்ற உணர்ச்சி இருக்கிறதா?” என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
ரசிகர்களின் இந்தத் கடும் எதிர்ப்பலைகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. அணியின் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து, லார்ட்ஸ் டெஸ்டுக்குப் பிறகு முகமது ரிஸ்வான் உட்பட 7 மூத்த வீரர்கள் அணியிலிருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டு உடனடியாகத் தாயகம் அனுப்பப்பட்டனர். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் இந்த அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது.
மைதானத்திற்கு வெளியே ஒரு வீரரின் முகபாவனை என்பது அணியின் தோல்வி மீதான அவரது உண்மையான வருத்தத்தைத் முழுமையாகக் காட்டாது என்றாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது சந்தித்துள்ள கடுமையான நெருக்கடியான சூழலில் ரிஸ்வானின் இந்தச் சிரிப்பு விவாதப் பொருளாய் மாறியுள்ளது. இதன் மூலம், அனுபவமிக்க விக்கெட் கீப்பர் ரிஸ்வான் இல்லாமல் பாகிஸ்தான் அணி தனது கடைசி டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.
