வடக்கு ஐரோப்பிய நாடான எஸ்தோனியாவின் தலைநகர் டாலின் நகரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ‘அயன்மேன் டாலின் 2026’ முழு தூர டிரையத்லான் போட்டியில், சோழிங்கநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷின் மகன் பரத்குமார் பங்கேற்று மாபெரும் சாதனை படைத்துள்ளார். உலகின் மிகக் கடினமான சவாலான இந்தப் போட்டியில் அவர் தனது அசாத்தியமான உடல் மற்றும் மன வலிமையை வெளிப்படுத்தி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

விளையாட்டு உலகத்தில் பெரும் மதிப்புமிக்க இந்தச் சாதனையைத் தமிழர் ஒருவர் நிகழ்த்தியிருப்பது பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தக் கடினமான டிரையத்லான் போட்டியில் பங்கேற்பாளர்கள் 3.8 கிலோ மீட்டர் நீச்சல், 180 கிலோ மீட்டர் சைக்கிளிங் மற்றும் 42.2 கிலோ மீட்டர் ஓட்டம் ஆகிய மூன்று கடுமையான கட்டங்களையும் தடையின்றித் கடக்க வேண்டும்.

இந்தச் சவாலான இலக்கை எதிர்கொண்ட பரத்குமார், தொடர் விடாமுயற்சியுடன் போராடி மொத்தம் 15 மணி 46 நிமிடங்களில் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். கடினமான சூழ்நிலைகளிலும் தளராத மன உறுதியையும், ஈடு இணையற்ற ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தி அவர் இலக்கை அடைந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வெறும் உடல் வலிமையை மட்டும் பரிசோதிக்கும் நிகழ்வல்லாமல், மன உறுதி மற்றும் இலக்கை நோக்கிய அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான சோதனையாகக் கருதப்படும் இந்தப் போட்டியில் சாதித்துள்ள பரத்குமாருக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

“>

 

இளம் தலைமுறையினர் மத்தியில் உடற்பயிற்சி மற்றும் சவாலான விளையாட்டுத்துறைகள் மீதான ஆர்வத்தை இந்தச் சாதனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.