ஆப்கானிஸ்தான் என்ற பெயரைக் கேட்டாலே கண்முன்னே வந்து நிற்பது போரும், அழிவும், தசாப்த கால உள்நாட்டு கலவரங்களும்தான். சோவியத் படையெடுப்பு தொடங்கி அமெரிக்கப் படைகளின் வருகை மற்றும் தற்போதைய ஆட்சி மாற்றம் வரை அந்த நாடு பல்வேறு சோதனைகளைக் கடந்துள்ளது. இந்த நீண்ட காலப் போர்களின் தழும்பாக அந்நாட்டின் வீதிகளிலும் நிலத்திலும் இன்னும் லட்சக்கணக்கில் வெடிக்காத குண்டுகளும், எஞ்சிய ஆயுதக் கழிவுகளும் கிடக்கின்றன. இந்நிலையில், காபூல் நகரின் வீதிகளில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
டிராவல் விலாகர் ஒருவர் காபூல் நகரின் தெருக்களில் உலா வந்தபோது பதிவு செய்த அந்த வீடியோ, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் மக்கள் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகளின் வெற்று உறை மற்றும் பாழடைந்த ஷெல்களைத் தங்களின் அன்றாட வீட்டு உபயோகப் பொருட்களாக மாற்றிவிட்டனர்.
வீடியோவில், மிகப்பெரிய உலோக வடிவிலான வெடிகுண்டு உறைகள் எவ்வித அச்சமும் இன்றி குப்பைத் தொட்டிகளாகவும் பயன்படுத்தப்படுவது தெளிவாகத் தெரிகிறது. சில இடங்களில் அதே குண்டு உறைகளில் மண் நிரப்பப்பட்டு அழகான செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. “ஒரு காலத்தில் மரணத்தைத் தழுவி வந்த ரஷ்ய குண்டுகள், இப்போது குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டன” என்ற நக்கல் கலந்த கேப்ஷனுடன் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
View this post on Instagram
இதைப் பார்க்கும் பலரும் இதை ஆப்கானிஸ்தானின் வறுமையின் வெளிப்பாடாகப் பார்க்கின்றனர்; சிலரோ இதை ஆப்கானியர்களின் ‘தேசத்துக்கே உரிய மாற்று ஏற்பாடு’ என்று வியக்கின்றனர். 500 கிலோ எடைக் கொண்ட இந்த குண்டு ஷெல்கள் அழிக்கப்படாமல் அல்லது வெடிக்காமல் போகும்போது, உலோகத்தின் உறுதித்தன்மை காரணமாக உள்ளூர் மக்கள் அவற்றை வீட்டின் உபயோகப் பொருட்களாகப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.
சிலர் இவற்றை வர்ணம் பூசி அழகுபடுத்துகின்றனர், வேறுசிலர் ஸ்கிரா வியாபாரிகளிடம் விற்று விடுகின்றனர். ஆயினும், இந்த விபரீதப் பழக்கத்திற்குப் பின்னால் பெரும் ஆபத்தும் மறைந்துள்ளது. பல சமயங்களில் ஆபத்தான வெடிக்காத குண்டுகளைத் தொடும்போது எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாகவே உள்ளது
