ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்காணிக்க இந்தியப் பாதுகாப்பு முகமைகள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு மிக அதிர்ச்சிகரமான புதிய தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளைக் கண்காணிப்பது எளிதாகிவிட்டதால், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளும், ஐஎஸ்ஐ (ISI) உளவு அமைப்பும் தங்களின் தகவல் பரிமாற்ற தந்திரத்தை அதிரடியாக மாற்றியுள்ளன.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஆபாச இணையதளங்கள் மற்றும் ஆபாச செயலிகளில் உள்ள ‘சாட்டிங்’  வசதிகளைப் பயன்படுத்தித் தீவிரவாதிகள் தங்கள் ஆட்களுடன் ரகசியத் தொடர்பில் இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் பல ஆபாசத் தளங்கள் முடக்கப்பட்டிருந்தாலும், விபிஎன் (VPN) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தீவிரவாதிகள் இந்தத் தளங்களுக்குள் நுழைந்து தங்கள் சதித்திட்டங்களை ஒருங்கிணைக்கின்றனர்.

அங்குள்ள ‘அருகில் உள்ளவர்களைத் தேடுங்கள்’ அல்லது ‘டேட்டிங்’ தொடர்பான சாட்டிங் டூல்களைப் பயன்படுத்தி, சாதாரணப் பயனர்கள் போலத் தோற்றமளித்துத் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றனர். இது பாதுகாப்புப் படையினருக்கு ஒரு புதிய சவாலாக மாறியுள்ளது. இதுமட்டுமின்றி, ‘டார்’ எனப்படும் ரகசிய நெட்வொர்க்கில் இயங்கும் Coatex மற்றும் Conion போன்ற ரகசியச் செயலிகளையும், பிரான்ஸ், வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த செயலிகளையும், சீனத் தொடர்புடைய ‘மூன்சாட்’ போன்ற தளங்களையும் இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மிக முக்கியமாக, செல்போன் எண்களோ அல்லது சிம் கார்டுகளோ தேவையில்லாத ‘விர்ச்சுவல் சிம் கார்டுகள்’ மூலம் இவர்கள் செயல்படுவது இந்தியப் பாதுகாப்புப் படையினரைக் கவலையடையச் செய்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் இந்த விர்ச்சுவல் சிம்கள், எந்தவொரு டிஜிட்டல் தடயத்தையும் விட்டுச் செல்லாது என்பதே இதன் பின்னணியிலுள்ள மர்மமாகும்.

ஏற்கனவே 2019-ம் ஆண்டு 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்த புல்வாமா தாக்குதலின் போது, இதே போன்ற 40-க்கும் மேற்பட்ட விர்ச்சுவல் சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டதை தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்திருந்தது. தற்போது மீண்டும் அதே பாணியில், ஆனால் ஆபாச இணையதளங்களின் மறைவில் பாகிஸ்தான் தனது சதித்திட்டங்களைத் தீட்டி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பத்தைத் தவறான வழிகளில் கையாண்டு வரும் இந்தச் சதிவலைகளை வீழ்த்த, இந்திய உளவுத்துறையும் தனது டிஜிட்டல் கண்காணிப்பை முன்னெப்போதையும் விடத் தீவிரப்படுத்தியுள்ளது.