குழந்தை குண்டாக இருந்தால் ஆரோக்கியமாக இருக்கிறது என்று நினைப்பது பெற்றோர்களின் தவறான புரிதலாகும். செப்டம்பர் 1 முதல் 7 வரையிலான ‘தேசிய ஊட்டச்சத்து வாரத்தில்’, குழந்தையின் தோற்றத்தை வைத்து மட்டும் ஆரோக்கியத்தை கணக்கிடக் கூடாது என்றும், அதிக உடல் எடையும் ஒரு வகையான ஊட்டச்சத்து சமநிலையின்மையே என்றும் மருத்துவர் க. இராவணன் விளக்குகிறார்.

ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது வெறும் ஒல்லியாக இருப்பது மட்டுமல்ல. குழந்தை குண்டாக இருந்தாலும் அவர்களுக்கு இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற நுண்ணூட்டச்சத்துகளின் குறைபாடு இருக்கலாம். எனவே, குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப உயரம் மற்றும் எடையை வளர்ச்சி அட்டவணை மூலம் தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் அவசியமாகும்.

குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து கஞ்சி, தானியங்கள், பருப்பு, முட்டை, காய்கறிகள் மற்றும் பழங்கள் எனச் சத்துக்கள் நிறைந்த உணவுகளைப் படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும். நீண்ட காலம் பால் அல்லது கஞ்சியை மட்டுமே கொடுப்பது சரியான அணுகுமுறை அல்ல.

பிஸ்கட், சாக்லேட், சிப்ஸ் மற்றும் இனிப்பு பானங்கள் போன்ற நொறுக்குத்தீனிகள் குழந்தையின் சிறிய வயிற்றை நிரப்பி, உண்மையான சத்துணவைச் சாப்பிடும் அளவைக் குறைத்துவிடும். அதிக சர்க்கரையும் கொழுப்பும் நிறைந்த இதுபோன்ற உணவுகள், பின்நாட்களில் குழந்தைகளுக்குச் தவறான உடல் பருமனை உண்டாக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளன.

குழந்தை சாப்பிட மறுத்தால் வற்புறுத்தாமலும், சாக்லேட் தருவதாகப் பேரம் பேசாமலும் அமைதியான சூழலில் உணவை அளிக்க வேண்டும். நமது பாரம்பரிய உணவுகளான சிறுதானியங்கள், கீரைகள், காய்கறிகள் மற்றும் முட்டை ஆகியவை போதுமானவை. குழந்தையின் எடை தொடர்ந்து குறையினாலோ அல்லது சோர்வாகக் காணப்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.