ஆந்திர மாநிலத்தின் மிகவும் புகழ்பெற்ற மாலை நேரச் சிற்றுண்டிகளில் ஒன்று ‘அப்பாலு’. மொறுமொறுப்பாகவும் இனிப்பாகவும் இருக்கும் இந்த பலகாரத்தை வீட்டிலேயே மிகக் குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையான முறையில் தயார் செய்து விடலாம்.
இதனைச் செய்ய அரை கப் அரிசி மாவு, ஒரு கப் மைதா மாவு, ஒன்றரை கப் சர்க்கரை அல்லது வெல்லம், கால் கப் தேங்காய் துருவல், அரை ஸ்பூன் ஏலக்காய் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் பொரித்தெடுக்கத் தேவையான அளவு எண்ணெய் ஆகியவை தேவைப்படும்.
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை அல்லது வெல்லத்தைச் சேர்த்துச் சிறிது தண்ணீர் ஊற்றி பாகு தயார் செய்து கொள்ள வேண்டும். அந்தப் பாகுடன் நெய், ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து, அந்தப் பாகுக் கலவையில் அரிசி மாவு மற்றும் மைதா மாவைச் சிறிது சிறிதாகத் தூவிக் கட்டியில்லாமல் கிளறி இறக்க வேண்டும். இந்த மாவை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, மூடி போட்டு சுமார் 2 மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
மாவு நன்கு ஊறிய பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்க வேண்டும். தயார் செய்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு உருண்டைகளாக எடுத்து, அதிரசம் போலக் கைகளில் தட்டி எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால் சுவையான ஆந்திரா ஸ்டைல் ‘அப்பாலு’ தயார்.
