தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் குறித்து மதுரை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. ராஜபாளையத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் குளிரூட்டப்பட்ட பேருந்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு பயணம் செய்த பயணியிடம் 100 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது சாதாரண பேருந்து கட்டணமான 75 ரூபாயை விட அதிகம் என்பதால், அரசு ரகசியமாக கட்டணத்தை உயர்த்திவிட்டதாக அந்தப் பயணி சமூக வலைதளங்களில் பதிவிட, அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள போக்குவரத்துத் துறை அதிகாரிகள், அந்தப் குறிப்பிட்ட பேருந்து முற்றிலும் குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து என்பதால், அதற்குரிய அரசு நிர்ணயித்த முறையான கட்டணமே வசூலிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சாதாரண பேருந்துகளில் பழைய கட்டணமான 75 ரூபாயே தொடருவதாகவும், அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே, சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று போக்குவரத்துத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.