முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஓபிஎஸ் தன்னைத் ‘தாய்க் கழகத்தில்’ இணைத்துக் கொண்டதாகக் கூறுவது தாய்மையைக் கொச்சைப்படுத்துவது போன்றது என்றும், மறைந்த ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் எந்தக் கட்சியை எதிர்த்தாரோ, அதே கட்சியில் ஓபிஎஸ் இணைந்திருப்பதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஓபிஎஸ்-ஸின் இந்த முடிவு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்வியை இப்போதே உறுதி செய்துவிட்டதாகத் தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும், திமுக எந்த அளவிற்குத் தோல்வி பயத்தில் இருக்கிறது என்பதற்கு ஓபிஎஸ் போன்றவர்களைச் சேர்த்துக் கொள்வதே சாட்சி என்று அவர் விமர்சித்துள்ளார்.

இதனால் ஓபிஎஸ் வருகையை திமுகவின் பலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது அக்கட்சியின் பரிதாப நிலையையே காட்டுகிறது எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழிசை, இந்த இணைப்பு திமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும் என்றும் தனது எக்ஸ் தளப் பதிவில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.