ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பாஜகவைச் சேர்ந்த ஆர்.எஸ். சுப்பிரமணியம் எழுதிய புத்தகத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அண்ணாமலை, முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தொடர்பாக முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: “புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திமுகவிலிருந்து வெளியேறியதற்கான பின்னணி, அவர் திமுக பொதுக்குழுவில் பேச திட்டமிட்டிருந்த உரை, யாரிடம் கணக்கு கேட்கப்போகிறேன், என்ன கேள்விகள் வைக்கப்போகிறேன் என எம்ஜிஆர் சொன்ன அனைத்தும் இந்த புத்தகத்தில் மிக நுட்பமாகவும், உண்மையோடு எழுதப்பட்டுள்ளது. இதுபோன்று அவர் வாழ்ந்த விதம், பழக்கவழக்கங்கள், நற்பண்புகள், தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த தகவல்களும் இதில் சுவையாக தொகுக்கப்பட்டுள்ளன,” எனத் தெரிவித்தார்.
மேலும், “அரசியலில் எம்ஜிஆர் எடுத்த முடிவுகள் பற்றி நாம் பல இடங்களில் கேட்டிருக்கலாம். ஆனால், ஒரு நல்ல மனிதனாக, ஒழுக்கமாக வாழ்ந்தவர் என்ற அடையாளத்தில் அவரைப் புரிந்து கொள்ள இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவரைப் போல ஒரு தலைவரின் வாழ்க்கை நமக்குத் தூண்டுதலாக இருக்க வேண்டும். அதற்காக இந்த புத்தகத்தை அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்,” என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் பாஜக நிர்வாகிகள், எம்ஜிஆர் பக்தர்கள், புத்தகாசிரியர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர். அண்ணாமலை கூறிய இந்த கருத்துகள், சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதோடு, எம்ஜிஆர் மீது கொண்ட பொதுமக்கள் நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுவதாகவே அமைந்துள்ளது.
