கிருஷ்ணகிரி மாவட்டம் ஹோசூரில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் பொதுக்குழு மற்றும் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவரான பிரமோத் முத்தாளிக், அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், “இந்துக்கள் மூன்றாவது குழந்தை பெற்றால் ரூ.1 லட்சமும், நான்காவது குழந்தை பெற்றால் ரூ.2 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும். இது மதமாற்றத்தை தடுக்கவும், இந்து மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மேற்கொள்ளப்படும் திட்டம்” என தெரிவித்துள்ளார். மேலும், “ஸ்ரீராம் சேனா அமைப்பு அரசியல் செய்யாது. ஆனால் இந்து தர்மத்திற்கு எதிராக செயல்படும் நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்பும்” எனக் கடுமையாகக் கூறியுள்ளார்.
அதனுடன், தமிழகத்தில் ஜிகாதி மற்றும் மதம் மாற்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன என்றும், இந்த செயல்களுக்கு திமுக அரசு நேரடி ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். பிரமோத் முத்தாளிக் வெளியிட்ட இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் மற்றும் சமுதாயத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளன. அவரது இந்த பேச்சு சமூக ஊடகங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
