சமீப காலங்களில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன, குறிப்பாக பேருந்து போன்ற கனரக வாகனங்கள் ஈடுபடும் விபத்துக்கள் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய விபத்துக்கள் நடக்கும்போது, பெரும்பாலும் ஓட்டுநர்கள் மீதே பழி சுமத்தப்படுகிறது. ஆனால், கனரக வாகன ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ளாமல் இந்தக் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன. இதை விளக்கும் வகையில், சமூக வலைதளத்தில் ஒரு விழிப்புணர்வு காணொளி வெளியாகியுள்ளது.

இந்தக் காணொளி, கனரக வாகனங்களை ஓட்டும்போது ஓட்டுநர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை தெளிவாக காட்டியுள்ளது. அந்த காணொளியில், ஒரு பேருந்து ஓட்டுநர் தனது இருக்கையில் அமர்ந்து, பேருந்தைச் சுற்றியுள்ள கண்ணாடிகளை ஆராய்கிறார். கண்ணாடிகளில் பார்க்கும்போது, பேருந்தின் அருகே யாரும் இல்லை என்பது தெரிகிறது. ஆனால், ஓட்டுநர் கதவைத் திறந்து வெளியே இறங்கி பார்க்கும்போது, பேருந்தைச் சுற்றி பலர் நின்றிருப்பது தெரியவருகிறது. இது கனரக வாகனங்களின் முக்கியமான பிரச்சனையை வெளிப்படுத்துகிறது.

இந்த வாகனங்களின் உள்ளே இருந்து பார்க்கும்போது, அருகில் நிற்பவர்கள் ஓட்டுநருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், வெளியே இறங்கி பார்த்தால் மட்டுமே உண்மையான நிலைமை தெரியவரும். இந்தக் காணொளி மக்களுக்கு பேருந்து போன்ற கனரக வாகனங்களின் அருகே சுற்றி நிற்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை எடுத்துரைத்துள்ளது.