ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சட்டெனப்பள்ளியில், சொத்து ஆசைக்காகச் சொந்தத் தாயையே மகள் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரமாதேவி என்ற முதியவர் தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், அவரது மகள் லட்சுமி அந்த வீட்டைத் தன் பெயருக்கு எழுதித் தருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

தாய் வீட்டை எழுதித் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த லட்சுமி, சம்பவத்தன்று திட்டமிட்டுத் தாயின் உணவில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்துள்ளார். ரமாதேவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்தத் தீ விபத்தில் ரமாதேவி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. லட்சுமியிடம் போலீசார் போனில் பேசியபோது அவர் காட்டிய அலட்சியமும், பின்னர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வீடு தீப்பிடிப்பதற்குச் சற்று முன்பு லட்சுமி அங்கிருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்துப் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், வீட்டை அபகரிப்பதற்காகத் தாயைக் கொலை செய்ததை லட்சுமி ஒப்புக்கொண்டார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.