தெலங்கானா மாநிலம் யாதத்ரி புவனகிரி நகராட்சியில் நடந்துள்ள இந்தச் சம்பவம், தேர்தல் அரசியலின் விசித்திரமான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் வார்டில் போட்டியிட்ட சொரூப ராணி என்பவர், தேர்தலில் தோல்வியடைந்த பிறகு தனது குடும்பத்தினருடன் வீதி வீதியாகக் களமிறங்கினார். “நான் கொடுத்த பணத்தையும், புடவையையும், ஹாட் பாக்ஸையும் உடனே திருப்பிக் கொடுங்கள்” என்று வாக்காளர்களின் வீடுகளுக்கேச் சென்று அவர் சண்டையிட்டதுதான் இப்போதைய டாக் ஆஃப் தி டவுன்.

​தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக விநியோகம் செய்யப்பட்ட அன்பளிப்புகளைத் தோல்விக்குப் பிறகு இப்படிப் பகிரங்கமாகத் திருப்பிக் கேட்பது ஜனநாயகத்தையே கேலிக்குள்ளாக்குவதாகப் பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர். சொரூப ராணியின் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த மக்கள், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் அந்த வேட்பாளர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இந்த ‘வசூல் வேட்டை’ வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.