தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு மாவட்டமாகச் சுற்றுப்பயணம் செய்து மக்களைக் கவரும் வகையில் அதிரடி வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். ஏற்கனவே மாணவர்களின் கல்விக்கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று நடைபாதை வியாபாரிகளுக்காக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள அனைத்துக் கடன்களும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று அவர் உறுதியளித்துள்ளார். கொரோனா காலத்திற்குப் பிறகு பெரும் பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் சிறு வணிகர்களைக் கவரும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

“மக்களின் கஷ்டம் தெரிந்த கட்சி அதிமுக தான்” என முழங்கிய எடப்பாடியின் இந்தத் தொடர் தள்ளுபடி அறிவிப்புகள், மற்ற அரசியல் கட்சிகளுக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுக அரசின் நிதி நிலைமையைச் சுட்டிக்காட்டி விவாதிக்கும் வேளையில், எடப்பாடியார் இப்படி அதிரடியாக வாக்குறுதிகளை அள்ளி வீசுவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.