நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யை, பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா ஒரு அதிரடியான கருத்தை முன்வைத்துள்ளார். “பெண்கள் குறித்துத் தவறாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் இதற்காக திமுகவினர் கொதிப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது” என்று அவர் சாடியுள்ளார்.

​அரசியலில் பெண் தலைவர்களை இழிவாகப் பேசும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதே தகுதியற்ற திமுகவினர்தான் என்று குற்றம் சாட்டிய அவர், தேர்தல் நெருங்குவதால் திடீரென ‘பெண் காவலர்களாக’ திமுகவினர் வேஷம் போடுகிறார்கள் என்று விமர்சித்துள்ளார். “விஜய் விவகாரத்தில் திமுகவினர் இவ்வளவு ஆர்வம் காட்டுவது தேர்தலுக்கான ஒரு நாடகமே” என்று அவர் வெளிப்படையாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நயினார் நாகேந்திரனின் பேச்சை விட, அதற்குப் பதிலடி கொடுத்த திமுகவின் பின்னணியை ராஜேஸ்வரி பிரியா கிழித்துத் தொங்கவிட்டிருப்பது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.