
பாஜகவின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், திமுக மற்றும் அதிமுக கூட்டணியையும், திமுக அமைச்சர் சேகர் பாபுவின் கட்சி மாறுதலையும் கடுமையாக விமர்சித்தார்.
“ஒரு காலத்தில் அம்மா அவர்களின் பக்தராக இருந்தவர் இன்று திமுகவின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்டார். அவர் எப்படி இப்படி திடீரென மாறினார்? அவரை விழுங்கியது என்ன? அதற்கான பதிலை அவர் தானே சொல்லட்டும்!” என கூர்மையாக கேள்வி எழுப்பினார்.
மேலும், “திமுகவின் மொழி, மத அரசியல் பேச்சுகள், இனபிரச்சனைகளை தூண்டும் சதி நாடகங்கள் எல்லாம் ஏற்கெனவே தெரிந்தவை. இப்போது, ‘நாங்கள் விழுங்க போகிறோம், நீங்கள் விழ போகிறீர்கள்’ என்று பேசுகிறார்கள். அப்படி நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? பாஜக ஒரு மலைப்பாம்பு அளவுக்கு பலம் வாய்ந்தது என்பதை நேரடியாக ஒத்துக்கொள்கிறீர்களா?” என்று கூறிய தமிழிசை, திமுகவின் பயத்தை வெளிக்கொணர அவர் நோக்கமென கூறினார்.
அதோடு, “உங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் யாரென்று தெளிவாக சொல்லுங்கள். சும்மா பேசிக்கொண்டே இருக்காதீர்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எல்லாம் உங்கள் கூட்டணியில் உள்ளனவா இல்லையா? அவர்களையும் விழுங்கப் போவீர்களா?” என தொடர்ந்து கேள்விகளை ஏந்திய தமிழிசை, திமுகவின் கூட்டணிக் கொள்கை முழுக்கவே பயம், குழப்பம், மறைமுக சூழ்ச்சிகளால் நிரம்பியதாக குற்றம்சாட்டினார்.