ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ஒரு வீட்டில் பணிபுரிந்த வீட்டு உதவியாளர் ஒருவர், அந்த வீட்டு செல்ல நாய் மீது மேற்கொண்ட கொடூரமான தாக்குதல் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்குச் செல்வதற்காக வீட்டில் இல்லாத நேரத்தில், நாயை பார்த்துக்கொள்பவர் அந்த நாயை கொடூரமாக தாக்கும் சம்பவம் வீட்டின் ஹாலில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.
சொஷியல் மீடியாவில் Street Dogs of Bombay என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்ட வீடியோவில், மஞ்சு கண்வார் என அடையாளம் காணப்பட்ட வீட்டு உதவியாளர் ஒருவர், ‘சோபி’ என்ற செல்ல நாயை பிடித்து தரையில் படுக்கடிக்க, பின்னர் மீண்டும் மீண்டும் தாக்குவதைக் காணலாம். நாய் பயந்தபடி தப்பிச் செல்ல முயற்சிக்க, அந்த பெண் தொடர்ந்து அதனை அடித்துக் கொண்டே இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன.
நாயின் உரிமையாளர் டாக்டர் சங்கீதா என்பவர். மருத்துவராக பணியாற்றும் இவர், வேலைக்குச் செல்லும் நேரங்களில் மஞ்சு கண்வார் என்பவரிடம் ‘சோபி’யை விட்டுச் செல்வது வழக்கம். சமீபத்தில் சோபி பயந்தபடி நடந்து கொண்டதையும், சத்தம் கேட்டாலே நடுங்குவதையும் கவனித்த சங்கீதா, சிசிடிவி காட்சிகளை பார்ப்பதற்காக திரும்பிப் பார்த்தபோது இந்த கொடூரம் தெரிந்தது.
இந்த சம்பவம் வெளிவந்த பிறகும், அதில் தொடர்புடைய நபருக்கு எதிராக எந்ததொரு எஃப்ஐஆரும் பதிவு செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ‘சோபி’ சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்லப்பிராணிகளை பாதுகாப்பதற்கான சட்டங்களை மீறிய இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விலங்கு ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.
