திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போதே ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகிய மூவரையும் கட்சியில் இணைப்பதில் ஈடுபட்டு உள்ளீர்களா என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒருங்கிணைக்க வேண்டும் என்று நான் எங்கும் பேசவில்லை. அந்த வார்த்தையை கூட நான் எங்கும் பயன்படுத்தவில்லை. நாளுக்கு நாள் புதுசு புதுசா கேள்வி எழுப்புறீங்க. நான் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை வருவேன். அப்படித்தான் இன்று சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்துள்ளேன்.

அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து வெற்றியை பெற்றுள்ளோம். சில துரோகிகளால் அங்கு தோல்வி ஏற்பட்டது என நான் கூறினேன். பாஜகவில் இணைந்தால் நல்லது என ஓபிஎஸ் கூறியது குறித்து அவரிடம் தான் கேள்வி கேட்க வேண்டும். மூத்த தலைவராக இருந்தாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட முடியாது. அரசியல் கட்சியில் மூத்த தலைவர் மற்றும் இளைய தலைவர் என்று எதுவுமே கிடையாது. அமைதியாக அவரவர் வேலையை பார்த்தால் நல்லது என்று செங்கோட்டையன் பேசியுள்ளார்.