தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 500 டன் இறால், கணவாய் உள்ளிட்ட கடல் உணவுகள், 50% வரி விதிப்பு எதிரொலியால் பாதியில் திருப்பி அனுப்பப்பட்டன.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பலில் ஏற்றப்பட்ட இந்த சரக்குகள், மொத்தம் 60 கண்டெய்னர்களில் அமெரிக்காவை நோக்கி சென்றிருந்தன. ஆனால், அங்கு வந்தவுடன், “இவ்வளவு அதிக வரி செலுத்தி வாங்க முடியாது” என்று அமெரிக்க வர்த்தகர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

இதனால், பாதியில் இருந்தபோதே கப்பல்களை திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டது. “அமெரிக்காவிற்கு கடல் உணவுகள் வந்து சேர்ந்தாலும், டெலிவரி எடுக்க மாட்டோம்” என்று வர்த்தகர்கள் தெரிவித்து இருப்பது, கடல் உணவு ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் மற்றும் மீனவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி பிரச்சினை நீடித்தால், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மீனவர்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.