நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயற்கை விவசாயம், ஆடு-மாடு வளர்ப்பு, பனை மர பாதுகாப்பு ஆகியவற்றில் எப்போதும் தீவிர அக்கறை காட்டி வருபவர். பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இவர், ஆடு-மாடுகளுக்கான மாநாட்டையும் நடத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இப்போது, திருத்தணி அருகே அருங்குளம் கூட்டு சாலையில் உள்ள மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில், ஆகஸ்ட் 30 அன்று காலை 10 மணிக்கு ‘மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காக பேசுவோம்’ என்ற தலைப்பில் ஒரு தனித்துவமான மாநாட்டை நடத்த உள்ளார். இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கின்றனர்.
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மரங்களோடு பேசுவோம்!
மரங்களுக்காகப் பேசுவோம்!
மரங்களின் மாநாடு
மனிதர்கள் இல்லாது மரங்கள் வாழும்; மரங்கள் இல்லாது மனிதர்கள் மட்டுமல்ல உலகில் எவ்வுயிரினமும் வாழ முடியாது!
ஆகஸ்ட் 30 ஆம் தேதி… pic.twitter.com/Z6m3pWYly5
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) August 28, 2025
இந்த மாநாட்டிற்காக சீமான் சில நாட்களுக்கு முன்பு மனிதநேய பூங்காவிற்கு சென்று, அங்குள்ள மரங்களை முத்தமிட்டு, ஒரு மரத்தின் கிளையை பிடித்து, “என்ன… உனக்கு தண்ணி ஊத்தினாங்களா? சாப்பாடு போட்டாங்களா?” என உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“மரங்கள் இல்லையேல் மனிதர்களோ, எந்த உயிரினமோ வாழ முடியாது” என வலியுறுத்தும் சீமான், “எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழும் மரங்களுக்கு வணக்கம்” என உருக்கமாக பேசினார்.
இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த நிகழ்வு, மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
