தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தில், ஆளும் தவெகவினர் அவையில் தங்களது தலைவரை மட்டுமே துதி பாடுவதாகத் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று கலந்துகொண்டு பேசிய அவர், தவெக அரசு மற்றும் சட்டமன்ற நடைமுறைகள் குறித்து அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

​அவையில் அவர் பேசுகையில், “சட்டமன்றம் என்பது அரசியல் கட்சிகள் தங்களது தலைவர்களைத் துதி பாடும் இடமல்ல. ஆளுநர் உரைக்கு நன்றி மட்டும்தான் தெரிவிக்க வேண்டும்; அதை விடுத்துவிட்டு இப்படித் துதி பாடுவது மிகுந்த கவலை அளிக்கிறது” என்று சாடினார். மேலும், “பொதுமக்களின் வரிப்பணத்தில் நடக்கும் சட்டமன்ற நடவடிக்கைகளை அவர்கள் முழுமையாகப் பார்க்க வேண்டும், எனவே அவையின் நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும்” என அதிரடி கோரிக்கை விடுத்தார்.

​தொடர்ந்து பேசிய அவர், “‘அலைகள் ஓய்வதில்லை’ என்பது போலத் தமிழ்நாட்டில் தற்போதும் பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை; ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் தனது பதில் உரையில் பேசுவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்” எனத் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் சவால் விடுத்துள்ளார். தவெக அரசுக்கு எதிராகத் தேமுதிக சட்டமன்றத்தில் எழுப்பியுள்ள இந்த காரசாரமான புகார்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.