தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, தவெக அரசு அவையின் மரபுகளை மீறி இருமுறை தேசிய கீதம் பாடியுள்ளதாகத் திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு எழுப்பியதும், அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவையிலேயே அதிரடியாகப் பதிலடி கொடுத்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் இன்று பேசிய திமுக எம்எல்ஏ ஆஸ்டின், “சட்டமன்றத்தில் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டு, அவையின் பாரம்பரிய மரபுகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளன” எனக் காரசாரமாகக் குற்றம் சாட்டினார்.

​திமுகவின் இந்த மரபு மீறல் குற்றச்சாட்டுக்குத் தவெக சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனடியாக எழுந்து நெத்தியடியாகப் பதிலளித்தார். அவர் பேசுகையில், “நாங்கள் எந்தவொரு அவையின் மரபுகளையும் மீறவில்லை. தேசிய கீதத்தைப் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவி ஜெயலலிதா என எல்லோரும் மதித்தார்கள், நாங்களும் மதிக்கிறோம்.

தமிழ்த்தாய் வாழ்த்தா, தேசிய கீதமா என்ற கேள்வி எழுந்தால், தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தான் முதலிடம் என்ற கொள்கை முடிவோடுதான் நேற்று சட்டப்பேரவை தொடங்கும் போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது” என்று கூறி திமுகவின் குற்றச்சாட்டைத் தவிடுபொடியாாக்கினார். சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் தொடர்பாகத் திமுக – தவெக இடையே வெடித்த இந்த காரசார விவாதம் தற்பொழுது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.