தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டிற்கு முதலமைச்சர் தலைமை வகிக்கிறார். தற்போதைய புதிய அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர்கள், துறைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு அதிரடி இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட சூழலில், இந்த உயர் அதிகாரிகள் மாநாடு கூட்டப்படுவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த இருநாள் கூட்டத்தில், அனைத்துத் துறைச்செயலாளர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் எனப் பலரும் நேரில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில், மாநிலத்தின் தற்போதைய சட்டம் – ஒழுங்கு நிலவரம், புதிய நிர்வாகச் சீர்திருத்தங்கள், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை விரைந்து முடிப்பது குறித்து முதலமைச்சர் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார்.
மேலும், பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவது குறித்தும், மாவட்ட வாரியாக நிலுவையில் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டு, அதிகாரிகளுக்குப் புதிய நிர்வாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
