மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மூண்டுள்ள சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகெங்கும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவிலும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து, ஹோட்டல் தொழில் உள்ளிட்ட வணிகங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இக்கட்டான இந்த நேரத்தில், ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு ‘பிங் ஷுன்’ என்ற கப்பல் இந்தியாவிற்குப் புறப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெயைப் பெறப்போகும் இந்த நடவடிக்கை, நாட்டின் எரிபொருள் தேவையைச் சமாளிக்கப் பெரிதும் உதவும் எனத் தெரிகிறது. சுமார் 5 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெயுடன் வரும் இந்தக் கப்பல், இந்த வார இறுதிக்குள் இந்தியாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது நிகழ்ந்தால், தற்போதைய போர்ச் சூழலில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டிலிருந்து இந்தியாவிற்கு ஒரு பெரிய நிம்மதி கிடைக்கும்.