அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நான்கு வாரங்களைக் கடந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் வளைகுடா நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சவூதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் இலக்கு வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாடுகள் ஈரானின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், தங்கள் மண்ணிலிருந்து அமெரிக்கப் படைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார். ஈரானின் இந்த அதிரடி அறிவிப்பு வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் இஸ்ரேல் நெருக்கடியில் உள்ள நிலையில், தற்போது வளைகுடா நாடுகளையும் ஈரான் எச்சரித்திருப்பது போரின் வீச்சை அதிகப்படுத்தியுள்ளது. “நாங்கள் முதலில் போரைத் தொடங்க மாட்டோம், ஆனால் எங்கள் பொருளாதார மையங்கள் தாக்கப்பட்டால் நிச்சயம் பதிலடி கொடுப்போம்” என்று ஈரான் அதிபர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது அமெரிக்கப் படைகளை வெளியேற்றச் சொல்லி ஈரான் விடுத்துள்ள இந்த மிரட்டல் சர்வதேச அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
