திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகே பத்தமடை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (வயது 40), கேரளாவில் வேலை பார்த்துவருகிறார். திருமணமான இவர், மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். சமூக வலைத்தளத்தின் மூலம், அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் முருகனுக்கு நட்பு ஏற்பட்டு, அது பின்னர் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மாணவி திடீரென வீட்டை விட்டு மாயமானார். அவருடன் முருகனும் காணவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் சேரன்மாதேவியில் செயல்படும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாணவியை மீட்ட போலீசார், முருகனை கைது செய்து, வழக்குப் பதிந்து, சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.
ஜாமினில் வந்த பின்னரும், முருகன் மாணவியுடன் தொடர்பைத் தொடர்ந்துள்ளார். கடந்த ஜூலை 14ஆம் தேதி, இருவரும் மீண்டும் வீட்டை விட்டு மாயமானனர். மாணவியின் தாயார் மீண்டும் புகார் அளித்ததைத் தொடர்ந்து, திருச்செந்தூரில் இருந்த இருவரையும் போலீசார் கண்டுபிடித்து, சேரன்மாதேவிக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையின் போது, மாணவி “பெற்றோருடன் செல்ல மாட்டேன்” என திட்டவட்டமாக தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். சிறுமி என்பதால், அவரை குழந்தைகள் பாதுகாப்பு காப்பகத்தில் ஒப்படைக்க தீர்மானித்தனர். இதனைத் தெரிந்துகொண்ட மாணவி, காவல் நிலையத்தின் மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இந்த சம்பவத்தில் மாணவியின் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தையடுத்து, முருகன் மீண்டும் கைது செய்யப்பட்டு, பாக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
