கான்பூரில் தந்தை ஒருவரே தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கத்தியால் வெட்டிக் கொலை செய்த கொடூரமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த 6 வயது மகன் ருத்ரவ், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளான்.

“அப்பா அக்காவைக் கொன்னுட்டாரு, நீ அந்த ரூமுக்கு போகாதே, உன்னையும் வெட்டிடுவாங்க” என்று அவன் தனது அத்தையிடம் கூறி அழுதது அனைவர் நெஞ்சையும் பதற வைத்துள்ளது. உறக்கத்திலிருந்து எழுந்த சிறுவன், ரத்தம் படிந்த படுக்கையையும், தனது சகோதரிகளின் உடல்களைப் போலீஸார் பிளாஸ்டிக் பைகளில் எடுத்துச் செல்வதையும் பார்த்து கதறி அழுதுள்ளான்.

அன்று முழுவதும் அந்த வீட்டில் அடுப்பு எரியாத நிலையில், பசியால் வாடிய அந்தச் சிறுவனுக்கு ஆன்லைன் மூலம் சாண்ட்விச் வரவழைத்துக் கொடுத்துள்ளனர்.

கொலையாளி சசிரஞ்சன் மிஸ்ரா தனது குடும்பத்தினருடன் சுமுகமான உறவில் இல்லை என்றும், யாரிடமும் பேசாமல் தனித்தே வாழ்ந்து வந்ததாகவும் அவனது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது சகோதரனை நினைத்துத் தான் வெட்கப்படுவதாக அவனது தங்கை வேதனையுடன் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தாய் ரேஷ்மா, தனது மகள்களின் புகைப்படங்களைப் பார்த்துத் தேம்பி அழுது கொண்டிருக்கிறார்.

ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இந்த குடும்பத்திற்கு, இவ்வளவு பெரிய துயரம் நடந்தும் அக்கம் பக்கத்தினர் யாரும் ஆறுதல் சொல்லக்கூட வரவில்லை என்பது வேதனையின் உச்சமாக உள்ளது. தற்போது இந்தக் கொடூரக் கொலை குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.