பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் சிலையுடனான மணிமண்டபத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (ஜனவரி 17) நேரில் திறந்து வைத்தார். நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய திருப்தியில் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், மக்கள் தலைவருக்குக் கௌரவம் சேர்த்த கையோடு, தென் மாவட்ட அரசியலில் ஒரு பெரிய திருப்பத்தையும் முதல்வர் ஏற்படுத்தியுள்ளார் என்பதுதான் இப்போதைய ஹாட் நியூஸ்!
மணிமண்டபத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் திடீரென அக்கட்சியிலிருந்து விலகி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணைந்த தொண்டர்களுக்கு முதல்வர் அவர்களே நேரில் கட்சித் துண்டு அணிவித்து, புன்னகையோடு புகைப்படம் எடுத்துக்கொண்டது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
