பீகாரின் பாட்னாவில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த 18 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரமான வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜனவரி மாதம் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் ஆரம்பத்தில் இதனைத் தற்கொலை என்று கூறி மூடிமறைக்க காவல்துறை முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் ஆய்வுகள் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன. அந்த மாணவி மரணமடைவதற்கு முன்பு அவர் மீது மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டிருப்பதும், அவரது உடலில் நகக்கீறல்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் பலத்த காயங்கள் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கொடூரச் செயலுக்கு எதிராக அந்த மாணவி தனது இறுதி மூச்சு வரை கடுமையாகப் போராடியுள்ளார் என்பதை அவரது உடலில் உள்ள காயங்கள் காட்டுகின்றன. இறுதியாக அவர் கழுத்து நெரிக்கப்பட்டோ அல்லது மூச்சுத் திணறடிக்கப்பட்டோ கொலை செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது. மேலும், மாணவியின் உடைகளில் விந்தணுக்கள் இருந்ததை தடயவியல் சோதனை உறுதி செய்துள்ளதால், இந்த வழக்கில் பாலியல் வன்புணர்வுக்கான ஆதாரங்கள் வலுவாகியுள்ளன.
இந்த விவகாரத்தில் கடமை தவறியதாக இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூரக் குற்றத்திற்குப் பின்னால் உள்ள உண்மையான குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மாணவியின் குடும்பத்தினரும், பொதுமக்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு நீதி கேட்டு வருகின்றனர்.
