தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகளில், திராவிடக் கட்சிகளின் கோட்டைகளாகக் கருதப்பட்ட தொகுதிகளில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதியில், திமுகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜாவை வீழ்த்தி, அமமுக வேட்பாளர் எஸ். காமராஜ் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். கடந்த இரண்டு முறையாக இதே தொகுதியில் வெற்றி பெற்ற டி.ஆர்.பி. ராஜாவின் கோட்டையை அமமுக தன்வசமாக்கியிருப்பது டெல்டா அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல், வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு தொகுதியில் அதிமுக வேட்பாளர் டி. வேலழகன் அபார வெற்றி பெற்றுள்ளார். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், சிட்டிங் எம்.எல்.ஏ-வான திமுகவின் ஏ.பி. நந்தகுமாருக்கும் வேலழகனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், சுமார் 5,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வேலழகன் வெற்றி பெற்றுத் தனது தொகுதியை மீட்டெடுத்தார். இந்தத் தொடர் தோல்விகள் ஆளுங்கட்சி முகாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் தங்களது வெற்றியை உற்சாகமாகத் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர்.
