செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதற்குச் சான்றாக, பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனம் தனது செலவுகளைக் குறைக்கவும், செயல்பாடுகளை நவீனப்படுத்தவும் சுமார் 9,000 பணியிடங்களைக் குறைக்க முடிவெடுத்துள்ளது.

இதற்காக ‘ஆக்சென்சர்’  நிறுவனத்துடன் இணைந்துள்ள BAT, வரும் காலங்களில் ஊழியர்கள் செய்து வந்த பணிகளை AI மற்றும் இயந்திரங்கள் மூலம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த முடிவால், நடப்பு ஆண்டின் இறுதிக்குள் 5,500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர், மீதமுள்ள 3,500 பணிகள் வெளி நிறுவனங்களுக்கு மாற்றப்படவுள்ளன.

இந்த மாற்றமானது உலகளவில் வேலையின்மை குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. குறிப்பாக, நுழைவு நிலை  பணிகளை AI மேற்கொள்ளத் தொடங்குவதால், இளம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் நேரடியாகத் தாக்கம் இல்லையென்றாலும், பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப மையங்கள் மூலம் இதன் தாக்கம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்றைய இளைஞர்கள் தரவு பகுப்பாய்வு, இயந்திரக் கற்றல் போன்ற புதிய தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்வது இனிவரும் காலங்களில் மிகவும் அவசியமான ஒன்றாகும்.