ராஜ்கோட் மாநகராட்சி சார்பில் கடந்த பிப்ரவரி 2026-ல் நடைபெற்ற மூன்று நாள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது, தேநீர் மற்றும் சிற்றுண்டிக்காகச் செலவிடப்பட்ட 47 லட்சம் ரூபாய்க்கான பில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 5,000 ஊழியர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்ற இந்தப் பணியின் போது, 21,000 கப் தேநீர், 21,000 கிளாஸ் எலுமிச்சை சாறு, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜிலேபி மற்றும் 2.5 லட்சம் பாட்டில் மினரல் வாட்டர் என மிக அதிகப்படியான செலவு காட்டப்பட்டுள்ளது.
இது வெறும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியாகவா அல்லது சுற்றுலாப் பயணமாகவா என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர். இந்தச் செலவு விவரங்களை ஆய்வு செய்த மாநகராட்சி நிலைக்குழு, தற்போது அந்தப் பில்களை நிறுத்தி வைத்து விசாரணை நடத்தி வருகிறது.
குறிப்பாக, மினரல் வாட்டர் பாட்டில்கள் மற்றும் சிற்றுண்டிகளுக்காகப் பெறப்பட்ட பில்களில் முறைகேடு நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அதிகாரிகளும் ஊழியர்களும் காஜு கத்திலி, ஜிலேபி, சமோசா போன்ற பலகாரங்களைச் சாப்பிட்டதாகப் பில்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வளவு உணவை உட்கொள்ள முடியுமா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
