தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகி வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுகவின் முக்கிய அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளனர். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், கடும் போட்டிகளுக்கு இடையே தனது தொகுதியைத் தக்கவைத்து மீண்டும் ஒருமுறை வெற்றி வாகை சூடியுள்ளார். தொகுதி மக்களின் பேராதரவுடன் அவர் முன்னிலை பெற்று தனது அரசியல் செல்வாக்கை நிலைநாட்டியுள்ளார்.

அதேபோல், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் களம் கண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆரம்பம் முதலே வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்த அவர், மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று திமுகவின் கோட்டையைத் தக்கவைத்துள்ளார். அமைச்சர்களின் இந்தத் தொடர் வெற்றிகள் திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று திருவண்ணாமலை தொகுதியில் அமைச்சர் எ.வ. வேலு, கடலூர் குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், திருமயம் தொகுதியில் ரகுபதி ஆகியோரும் வெற்றி வாகை சூடியுள்ளனர். மேலும் அருப்புக்கோட்டை தொகுதியில் அமைச்சர் kkssr ராமச்சந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.