ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அருகே உள்ள பல்லப்கர் பகுதியில், 28 வயதான ராகுல் என்ற இளம் தொழிலதிபர் தனது துணிக்கடையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீவிர முடிவை எடுப்பதற்கு முன்னதாக ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது மனைவி ஜோதி, மாமியார் வீணா, மாமனார் பிட்டு மற்றும் மைத்துனி நீது ஆகியோர் தனக்குத் தொடர்ந்து கடுமையான மன உளைச்சலையும், சித்திரவதையையும் கொடுத்து வந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். வீட்டைப் பெருக்குவது, பாத்திரம் கழுவுவது உட்பட அனைத்து வீட்டு வேலைகளையும் தான் செய்த போதிலும், அவர்கள் தன்னைத் தொடர்ந்து அசிங்கப்படுத்தி வந்ததாக அந்த வீடியோவில் அவர் கதறியுள்ளார்.

​மேலும், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை உடல் ரீதியாகத் தாக்கியதோடு, தன் மீது பொய் வழக்குகளைப் போட்டுத் தொடர் மன
அழுத்தத்திற்கு ஆளாக்கியதாக ராகுல் அந்த வீடியோவில் வேதனை தெரிவித்துள்ளார். தனது மரணத்திற்குத் தனது மனைவியும் அவரது குடும்பத்தினரும்தான் முழுப் பொறுப்பு என்றும், சட்டப்படி அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தனது மறைவுக்குப் பிறகு தனது சொத்துக்கள் அனைத்தும் தனது தாய், சகோதரி மற்றும் சகோதரர்களுக்குச் சேர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.