ஜப்பானியர்கள் உலகின் மற்ற நாட்டு மக்களை விட மிகக் குறைவாகவே தூங்குகிறார்கள். நீண்ட வேலை நேரம் மற்றும் பயணக் கலாச்சாரம் காரணமாக, அங்கு ‘நல்ல தூக்கம்’ என்பது தற்போது சுமார் 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பெரிய வணிகமாக மாறியுள்ளது.

இதற்காக ஜப்பானில் 20 நிமிடங்களில் புத்துணர்ச்சி அளிக்கும் பிரத்யேக ஆடைகள், தூக்கத்தை முறைப்படுத்தும் நவீன சாதனங்கள் மற்றும் அலுவலகங்களில் பணியாளர்கள் நின்று கொண்டே தூங்கும் ‘ஸ்டாண்டிங் நேப் பாக்ஸ்கள்’  எனப் பல புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய குறுகிய காலத் தூக்கம் அவசர காலத் தீர்வாக இருந்தாலும், இது நீண்ட காலத் தூக்கமின்மைக்கு நிரந்தரத் தீர்வல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஜப்பானின் புகழ்பெற்ற கேப்சூல் ஹோட்டல்கள் இப்போது தூக்கத்தைக் கண்காணிக்கும் நவீன ஆய்வகங்களாக மாறியுள்ளன.

சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த ஹோட்டல் அறைகள், விருந்தினர்களின் தூக்கத்தைப் பரிசோதித்து, ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற அறிவுறுத்துகின்றன.மேலும், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் படுக்கைகள் மற்றும் உறக்கத்திற்கு ஏற்றவாறு ஒளி, வெப்பநிலையை மாற்றியமைக்கும் வீடுகள் அங்கு பிரபலமாகி வருகின்றன.

வீடுகளில் பயன்படுத்தப்படும் அதிகப்படியான வெளிச்சம் கூட தூக்கத்தைக் கெடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்; இரவு நேரத்தில் மென்மையான ஒளியைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான உறக்கத்திற்கு நல்லது என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.