இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூர் நகரம், ஐடி ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் வாழ்வதற்கு மிக அதிக செலவு பிடிக்கும் ஒரு இடமாக மாறி வருகிறது. இந்நிலையில், பெங்களூரில் வசித்து வரும் அஞ்சலி என்ற பெண் சாப்ட்வேர் இன்ஜினியர், தனது ஒரு மாத கால செலவு விபரங்களை இன்ஸ்டாகிராம் வீடியோவில் உடைத்து விவாதம் ஒன்றை கிளப்பியுள்ளார். அட்லாசியன் (Atlassian) நிறுவனத்தில் பணிபுரியும் அவர், கடந்த மே மாதத்தில் மட்டும் வாடகை, உணவு, ஷாப்பிங் மற்றும் சுற்றுலா என மொத்தம் 71,000 ரூபாய் செலவழித்துள்ளதாகக் கூறியுள்ளார். ஒரு பெரிய நகரத்தில் தனியாக வாழும் பெண்ணுக்கு இந்த பட்ஜெட் ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சலி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், அவரது மிகப்பெரிய செலவாக 1BHK பிளாட்டின் வாடகை மற்றும் மெயின்டனன்ஸிற்கு மட்டுமே 28,000 ரூபாய் போவதாகவும், கரண்ட் மற்றும் தண்ணீருக்கு 1,000 ரூபாய் செலவாவதாகவும் தெரிவித்துள்ளார். ஆபீஸிலேயே காலை மற்றும் மதிய உணவு கிடைத்துவிடுவதால், இரவு சமையல்காரருக்கு 3,000 ரூபாயும், மளிகைப் பொருட்களுக்கு 4,000 ரூபாயும் மட்டுமே செலவாகிறது. மீதமுள்ள தொகையில் ஜிம் மற்றும் வைஃபை கட்டணமாக 3,000 ரூபாயும், வார இறுதி நாட்களில் ஷாப்பிங் மற்றும் ஹோட்டல் உணவுகளுக்கு 15,000 ரூபாயும், குட்டி ட்ரிப் அடிக்க 20,000 ரூபாயும் செலவிடுவதாகக் கணக்கு காட்டியுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள், “பலருடைய மாத சம்பளமே 71,000 ரூபாய் இல்லை, பெங்களூரில் இவ்வளவு ஆடம்பர செலவு தேவையா?” என்றும், இன்னும் சிலரோ “பெங்களூரின் தற்போதைய வாடகை விலைக்கு இந்த செலவு சாதாரணமானதுதான்” என்றும் இருவேறு கருத்துக்களை மோதவிட்டு வருகின்றனர்.
