மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி பகுதியில் நிலவும் கடும் குடிநீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டைக் கண்டித்து, உள்ளூர் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், அப்பகுதிக்கான பாஜக எம்.எல்.ஏ ப்ரீதம் லோதி  மக்கள் மத்தியில் ஆய்வு செய்யச் சென்றார். அப்போது, தங்களுக்குப் போதுமான குடிநீர் வசதி இல்லை என்று ஒரு பெண் அவரிடம் ஆதங்கத்துடன் முறையிட்டார்.

 

அதற்குப் பதிலளித்த எம்.எல்.ஏ, மிகுந்த அலட்சியத்துடன் தனது பாக்கெட்டில் இருந்த ஒரு சிறிய தண்ணீர் பாட்டிலை எடுத்து அந்தப் பெண்ணின் கையில் திணித்தார்.  எக்கச்சக்கமான மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் வேளையில், எம்.எல்.ஏ-வின் இந்த ஏளனமான செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் நிலையில், எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் பாஜக எம்.எல்.ஏ-வை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“நாங்கள் கேட்பது நிரந்தரமான குடிநீர் வசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், ஆனால் எம்.எல்.ஏ கொடுக்கும் 10 ரூபாய் மதிப்புள்ள ஒரு தண்ணீர் பாட்டில் எங்களது நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்துவிடுமா?” எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்புடன் செயல்படுவதற்குப் பதிலாக, மக்களின் வலியைச் சாதாரணமாகவும் கேலியாகவும் எடுத்துக்கொண்ட எம்.எல்.ஏ ப்ரீதம் லோதியின் இந்தச் செயல், தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.