மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள பண்டா அரசு மருத்துவமனையில், சளி மற்றும் இருமலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட 19 மாதக் குழந்தை, தவறான மருந்தால் தனது பார்வையை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் கண்களில் ஏற்பட்ட சிவப்பிற்காக சிகிச்சை அளிக்க வந்த தந்தை இந்திரஜ் விஸ்வகர்மா, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை வாங்கித் தந்துள்ளார். அப்போது, வாய் வழியாக உட்கொள்ள வேண்டிய சளி நீக்கும் மருந்து, தவறுதலாக குழந்தையின் கண்களில் ஊற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து, போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, குழந்தையின் கண்கள் நிரந்தரமாகப் பார்வை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொடூரமான மருத்துவ அலட்சியம் குறித்து குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் காட்டுத்தீ போல பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

“>

 

ஏழை எளிய மக்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய அலட்சியமான செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.