ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் வசிக்கும் ‘பஞ்ச்’ என்ற குட்டி குரங்கு, இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. பிறந்ததுமே தாயால் கைவிடப்பட்ட இந்தப் பஞ்ச், ஆரம்பத்தில் தனிமையைப் போக்க ஒரு மென்மையான பொம்மையைத் துணையாகக் கொண்டு வளர்ந்தது. பஞ்ச் அந்தப் பொம்மையைக் கட்டியணைத்துக் கொண்டிருக்கும் உருக்கமான காட்சிகள் ஏற்கனவே பலரது கவனத்தை ஈர்த்திருந்தன.

தற்போது பஞ்ச், ‘மோமோ-சான்’ என்ற பெண் குரங்குடன் நெருங்கிய நட்பைப் பேணி வருகிறது. இவை இரண்டும் ஒன்றாக விளையாடுவதும், முத்தமிடுவது போன்ற அன்பைப் பகிர்ந்து கொள்வதும் சமூக வலைதளங்களில் பல மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன.

இந்தக் குரங்குகளின் பிணைப்பைக் கண்ட நெட்டிசன்கள், நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “பஞ்ச் புகழ்பெற்றவன் என்பதால் தான் மோமோ-சான் அவனுடன் பழகுகிறாள்” என்றும், “அவள் பஞ்சின் புகழுக்காகத்தான் அவனுடன் இருக்கிறாள்” என்றும் கிண்டலாகக் கூறி வருகின்றனர்.

மேலும் பஞ்சின் ஆரம்பகால சோகமான வாழ்க்கைக்குப் பிறகு, அவனுக்கு மோமோ-சான் போன்ற ஒரு துணை கிடைத்திருப்பது ஒருபுறம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மற்றொருபுறம் இணையவாசிகள் மனித உறவுகளுடன் ஒப்பிட்டு இதனை ஒரு வேடிக்கையான ‘காதல் கதையாக’ மாற்றி சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.