ஈரான் வசம் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் அந்நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாகத் தலைநகர் டெஹ்ரானை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்குப் பதிலடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் போர் அறிவிப்பு செய்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக வளைகுடா பிராந்தியம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்து பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஈரானுடன் போரிட்டு வரும் அமெரிக்காவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப் போவதில்லை என்று சுவிட்சர்லாந்து அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு நாடு ஆயுத மோதலில் ஈடுபட்டிருக்கும் போது அந்த மோதல் முடியும் வரை ஆயுதங்களை ஏற்றுமதி செய்யக் கூடாது என்ற சுவிட்சர்லாந்தின் நடுநிலைக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு ஆயுத விநியோகத்தைத் தடை செய்துள்ள சுவிட்சர்லாந்து அரசின் இந்தச் செயல் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடாப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் சுவிட்சர்லாந்தின் இந்தத் திடீர் அறிவிப்பு அமெரிக்காவிற்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
