அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் காரோட்டிச் சென்ற ஒரு நபர், மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் போலவே இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீயாகப் பரவியது. நெடுஞ்சாலையில் திறந்தவெளி காரில் சென்ற அந்த நபரைக் கண்ட நெட்டிசன்கள், 2019-ல் சிறையிலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட எப்ஸ்டீன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் எனப் பல்வேறு சதித் திட்டக் கோட்பாடுகளை கிளப்பிவிட்டனர்.
இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று இணையத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியது. இந்நிலையில், வீடியோவில் இருந்த அந்த நபர் ‘பாம் பீச் பீட்’என அடையாளம் காணப்பட்டுள்ளார். தன்னை எப்ஸ்டீனுடன் ஒப்பிட்டுப் பரவும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில், தான் எப்ஸ்டீன் இல்லை என்பதையும், தான் காரோட்டிச் சென்றபோது யாரோ ஒரு அந்நியர் தன்னைத் தெரியாமல் வீடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார். எப்ஸ்டீனின் தோற்றத்தோடு இவருக்கு இருந்த அச்சு அசலான ஒற்றுமை உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
