அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப்படை ஈரான் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அதற்குப் பதிலடியாக வளைகுடா அரபு நாடுகள் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. குறிப்பாகக் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்கள் ஈரானால் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

கத்தாரில் உள்ள ராஸ் லபான் தொழில்துறை நகரத்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு ஆலை மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உலகின் மிக முக்கியமான இயற்கை எரிவாயு உற்பத்தி மையங்களில் ஒன்று என்பதால் இந்தத் தாக்குதலானது உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கவலையையும் பீதியையும் உருவாக்கியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் இந்தப் போர்ச் சூழலால் உலக கச்சா எண்ணெய் சந்தையில் வரலாறு காணாத மிகப்பெரிய சீர்குலைவு ஏற்படக்கூடும் எனச் சர்வதேச எரிசக்தி முகமை தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரக் குறைந்தது ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேலாகலாம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் இந்த நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எரிசக்தி நெருக்கடி ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாகப் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.

இந்தப் போர் நீடித்தால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.