இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது வங்கி கிளைகள் மற்றும் ஏடிஎம் (ATM) மூலம் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வரவிருக்கும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வரவுள்ளதாக வங்கி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி, ஒரு மாதத்திற்கு வங்கி கிளையிலோ அல்லது ஏடிஎம்களிலோ இலவசமாகப் பணம் எடுப்பதற்கான குறிப்பிட்ட வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மாதத்திற்கு 4 முறைக்கு மேல் நீங்கள் பணத்தை எடுத்தால், அதற்கடுத்து எடுக்கப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 4 முறையைக் தாண்டி எடுக்கப்படும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.15 உடன் ஜிஎஸ்டி (GST) கட்டணமும் சேர்த்து வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து நேரடியாகப் பிடிக்கப்படும். இந்த புதிய கட்டண உயர்வு அறிவிப்பு, எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், “நமது சொந்தப் பணத்தை நாமே எடுப்பதற்கு இவ்வளவு கட்டணங்களா?” என்று பொதுமக்கள் கொதித்தெழுந்துள்ளனர். குறிப்பாக, சிறு தொழிலாளர்கள் மற்றும் அடிக்கடி குறைந்த தொகையைப் பணமாக எடுக்கும் சாமானிய மக்களுக்கு இந்த புதிய நடைமுறை கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, வரவிருக்கும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களின் ஏடிஎம் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளை கவனமாகத் திட்டமிட்டுப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த திடீர் கட்டண உயர்வு அறிவிப்பு சோஷியல் மீடியாவிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
