அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த 28ம் தேதி போரைத் தொடங்கின. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை வீச்சு நடத்தி வருகிறது.
போர்ச் சூழல் காரணமாக உலக அளவில் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடியுள்ளதால் அங்கு கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இந்தப் பாதையை மீண்டும் திறக்க உதவுமாறு தனது நட்பு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுப் போர்க்கப்பல்களை அனுப்பப் பல நாடுகள் முன்வராதது டிரம்பிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவாத நேட்டோ நாடுகளைக் கோழைகள் என்று டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் நிதியுதவியைப் பெற்றுக்கொண்டு அவசரக் காலத்தில் உதவாமல் ஒதுங்கிக் கொள்ளும் நாடுகளைத் தாம் என்றும் நினைவில் வைத்திருப்பதாக அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்கா இல்லையென்றால் நேட்டோ அமைப்பு வெறும் காகிதப் புலிதான் என்றும் அவர் சாடியுள்ளார்.
போரில் உதவ மறுக்கும் நாடுகள் மறுபுறம் எண்ணெய் விலை உயர்வு குறித்துப் புகார் கூறுவது நியாயமற்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா ஏற்கனவே மிகப்பெரிய ராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதால் இனி தங்களுக்கு மற்ற நாடுகளின் உதவி தேவையில்லை என்றும் டிரம்ப் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
