பெங்களூரு நகரைச் சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவருக்கு முகநூல் மூலம் ஒரு இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் நண்பர்களாகப் பழகிய இவர்கள், வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் பேசித் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். இதனை ரகசியமாகப் பதிவு செய்த அந்தப் பெண், அந்த வீடியோவை வைத்து முதியவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார்.
பயந்துபோன முதியவர் முதற்கட்டமாக 2 லட்சம் ரூபாயை அந்தப் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால், அந்தப் பெண் மீண்டும் கூடுதல் பணம் கேட்டு மிரட்டியபோது, தன்னிடம் பணம் இல்லை என்று முதியவர் மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், முதியவரின் அந்தரங்க வீடியோக்களை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விசாரித்தபோது, முதியவர் நடந்த உண்மைகளைக் கூறியுள்ளார். இது குறித்து அவரது மருமகள் கடந்த மார்ச் 3-ஆம் தேதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
முதியவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணின் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடியில் ஈடுபட்ட பெண்ணை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர்.
